டி.கே.ரங்கராஜன் எம்.பி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டி.கே.ரங்கராஜன் எம்.பி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 டிசம்பர், 2010

ஒபாமாவின் கொள்கைகளை எதிர்ப்பது ஏன்? -டி.கே.ரங்கராஜன் எம்.பி.

அமெரிக்காவின் 44வது அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வந்துள்ளார். உலகின் அதி காரம் வாய்ந்த பதவி என்று கருதப்படும் இந்த பதவிக்கு ஆப்பிரிக்கர் - அமெரிக்கரான கறுப் பினத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா தேர்வு செய் யப்பட்ட பிறகு அவர் இந்தியா வருவது இது முதன்முறையாகும்.

அமெரிக்க அதிபராக பல அறிவு ஜீவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக ஜார்ஜ் வாஷிங்டன் 1789ம் ஆண்டு ஏப்ரல் 30ம்தேதி பதவியேற் றார். அதன் பிறகு 219 ஆண்டுகள் கழிந்த பிறகு தான் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டில் ஜனாதிபதியாக வர முடிந்துள் ளது. எவ்வளவுதான் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டிருந்தபோதும், ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவின் சமூக வாழ்க்கையில் இனவெறி எந்தளவுக்கு புரையோடி போயுள் ளது என்பதை இதன் மூலம் உணர முடியும்.

நவம்பர் 8ம்தேதி நாடாளுமன்றத்தில் ஒபாமா உரையாற்ற உள்ளார். அனைத்து நாடா ளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து இடது சாரி உறுப்பினர்களும் அவரது உரையை கேட்க உள்ளனர். கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்தபோது நாடாளுமன்றத்தில் அவர் ஆற் றிய உரையை இடதுசாரிக் கட்சிகள் புறக் கணித்தன.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ்சுக்கு நாடாளுமன்றத்தில் உரை யாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது அரசை இடதுசாரிக் கட்சிகள் ஆதரித்தது தான் இதற்கு காரணம்.

ஒரு மகிழ்ச்சியான மனநிலையில் ஒபாமா இந்தியா வந்துள்ளதாக கூற முடியாது. அமெ ரிக்காவில் நடந்த மாகாண இடைத்தேர்தலில் அவரது ஜனநாயக கட்சி படுதோல்வி அடைந் ததோடு செனட் சபையில் அவரது கட்சி சிறு பான்மையாக குறுகி விட்டது. இதனால் அவ ரது பதவிக்கு ஆபத்து இல்லை என்றபோதும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்நாட்டு மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்ற போகிறார் என்பது கூர்மையாக கவனிக்கப்படும்.

தேர்தலின்போது பாரக் ஒபாமா படாடோ பமாக அறிவித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதே உண்மை. 2010ம் ஆண்டு ஆகஸ்ட்டில் அமெரிக்கா குறித்து வெளியான புள்ளி விபரங்கள் கவலை அளிப்பதாகவே உள்ளது. அந்நாட்டின் 90 சத வீத மக்கள் கடுமையான பொருளாதார சிக்க லில் சிக்கியுள்ளனர். வேலையின்மை தொடர் ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விலை வாசி விண்ணை தொடுகிறது. 2008ம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு பாரக் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்து வரு கிறது என்பதை கணிப்புகள் கூறுகின்றன.

உற்பத்தியை பெருக்குவது எப்படி என்று உலகிற்கு அமெரிக்கா உபதேசம் செய்கிறது. சர்வதேச நிதியம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு ஆகிய சர்வதேச நிதி அமைப்பு களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு உலக நாடுகளுக்கு பல்வேறு நிர்ப் பந்தங்களை தருவதோடு, ஆலோசனை களை வழங்குகிறது அமெரிக்கா. ஆனால், அந்த நாட்டின் பொருளாதார நிலையோ மிக வும் பரிதாபகரமான நிலையிலேயே உள்ளது. இந்த ஆண்டு மட்டும் 140 வங்கிகள் மூடப் பட்டுள்ளன. மேலும் 829 வங்கிகள் சிக்கலில் உள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

அமெரிக்காவின் கடந்த கால ஆட்சியாளர் கள் பின்பற்றிய உள்நாட்டு, வெளிநாட்டு கொள் கைகளால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அதன் மூலம் ஆட்சிக்கு வந்தவர் ஒபாமா. ஆனால், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதே நிதர்சனம். 2009 அக்டோபரில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்த விபரத்தை பதிவு செய்துள்ளன.

முந்தைய புஷ் நிர்வாகம் ஏற்படுத்திய பல சிக்கல்களை, கோளாறுகளை தீர்ப்பதற்கு ஒபாமா அளித்த பல வாக்குறுதிகள் நிறை வேற்றப்படவில்லை. ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன பிரச்சனைகளில் முந்தைய நிர் வாகம் மேற்கொண்ட அதே அணுகுமுறை யையே ஒபாமா நிர்வாகமும் பின்பற்றுகிறது. இராக் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க முடியவில்லை. அந்த நாட்டில் முறையான ஜனநாயக ஆட்சியை நிறுவவும் இல்லை.

அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிதி நிறுவனங்கள்தான் அந்தநாட்டின் பொரு ளாதாரத்தை தீர்மானிக்கின்றன. உலக நாடு களை சுரண்டுவதே அவர்களது நோக்கம். எல்லா வளமும் உள்ள அமெரிக்க நாட்டின் வர்க்க குணம் என்பது ராணுவ தளவாட- தொழிலை (ஆடைவையசல ஐனேரளவசயைட ஊடிஅயீடநஒ) அடிப்படையாக கொண்ட ஒரு நாடாகவே உள்ளது. சுருக்கமாக சொல்வதானால் ஒரு நாள் தீபாவளியை நம்பி சிவகாசி பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகம் முழு வதும் போர் வெடித்து வேட்டுச் சத்தம் கேட் டுக் கொண்டேயிருந்தால்தான் அமெரிக்கா வின் பொருளாதாரம் நிலைபெற முடியும்.

இன்றைக்கு உலகில் 700 முதல் 800 இடங்களில் அமெரிக்கா தனது ராணுவ தளங்களை நிறுவியுள்ளது. சிறிதாகவோ, பெரியதாகவோ நூற்றுக்கும் மேற்பட்ட நாடு களில் அமெரிக்க ராணுவம் உள்ளது. பல் வேறு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா நேரடியாகவும், மறைமுகமாகவும் தலையிடுகிறது. முன்பு ஈரானுக்கும், இராக்குக் கும் ஒரே நேரத்தில் ஆயுதங்களை விற்றது போல இப்போது இந்தியாவுக்கும், பாகிஸ் தானுக்கும் அமெரிக்கா ஆயுதங்களை விற் பனை செய்கிறது.

1950களில் நாம் உணவுக்கு அமெரிக்கா விடம் கையேந்தி நின்றோம். பிஎல் 480 என்ற சட்டத்தின்படி நமக்கு உணவு வழங்க வகை செய்யப்பட்டது. அமெரிக்க ஒபாமா தன்னு டைய மக்களுக்கு வேலைகேட்க சீனாவை யும், இந்தியாவையும் நாட வேண்டிய நிலை யில் உள்ளார். ஒபாமா ஒற்றை ஆளாக இங்கு வரவில்லை. அவருடன் 250க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் உடன் வருகிறார்கள். அமெ ரிக்காவில் தயாராகும் ராணுவ தளவாடங்கள், விமானங்கள், அணு உலைகள் ஆகியவற் றுக்கு சந்தை தேடி இங்கே வருகிறார் ஒபாமா. இவற்றை நாம் வாங்கினால் அவர்களுடைய நாட்டில் தொழில்வளர்ச்சி ஏற்படும், இதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாகும். அவர்களது நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை இறக் குமதி செய்து, நமது சந்தையில் விற்க வேண் டும் என்று கோரிதான் வந்துள்ளார்.

ஒபாமாவின் முதல்நாள் பயணத்திலேயே அமெரிக்க நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் 2.2 பில்லி யன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு உடன்பாடு செய்துகொண்டுள்ளன. இரு தரப்பு வர்த்தக ஒத்துழைப்பு அதிகரிக்குமென குதூகலிக் கிறார் இந்திய பெருமுதலாளி டாடா. அமெ ரிக்காவில் 50ஆயிரம் பேருக்கு இந்த உடன் பாடுகளால் வேலை கிடைக்கும் என்கிறார் ஒபாமா. ஆனால் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் என்பதை ஏற்கனவே நிராகரித்துவிட்டார். உயர் தொழில் நுட்ப விஷயங்களில் கட்டுப்பாடு படிப்படி யாகத்தான் தளர்த்தப்படும் என்றும் கூறி விட்டார்

ஆனால் விவசாயம், உயர் கல்வி, இன்சூ ரன்ஸ், வங்கி ஆகியவற்றில் அந்நிய முத லீட்டை அதிகரிக்க வேண்டுமென்று அமெ ரிக்கா நிர்ப்பந்தம் செய்கிறது. இதற்கு மன் மோகன்சிங் அரசும் துணைபோகிறது. சில் லரை வர்த்தகத்தில் தங்களை அனுமதிக்க வேண்டுமென்று வால்மார்ட் அதிகாரிகள் தில்லியில் முகாமிட்டுள்ளனர். இந்தியாவின் பெருநகரங்களில் தங்களது மால்களை நிறுவ அனுமதிக்க வேண்டுமென அவர்கள் நிர்ப்பந் திக்கின்றனர். சில்லரை வர்த்தகத்தில் வால் மார்ட்டை அனுமதித்தால் 4 கோடி சில்லரை வர்த்தகர்களின் நிலை, வாழ்க்கை சீரழியும்.

போபால் விஷவாயு விபத்துக்கு காரண மான ஆண்டர்சனை ஒப்படைப்பது குறித்து ஒபாமா எந்த உறுதிமொழியும் அளிக்க வில்லை. கியூபாவின் மீதான பொருளாதார தடையை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுக்காண்டு தீர்மானம் நிறைவேற் றியபோதும் அதை அலட்சியப்படுத்துவோர் பட்டியலிலேயே ஒபாமாவும் உள்ளார்.

ஒபாமா ஜனாதிபதியாக வந்ததால் கறுப் பின மக்களின் வாழ்க்கை விடிந்துவிட வில்லை. அமெரிக்காவில் வேலையின்மை 9.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதில் கறுப் பின மக்களின் வேலையின்மை விகிதம் 49 சதவீதமாக உள்ளது. இனவெறி என்பது பல் வேறு வடிவங்களில் அமெரிக்க சமூக வாழ் வில் தொடரவே செய்கிறது.

எந்தவொரு தனிநபரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, இடதுசாரிக் கட்சி களோ எதிர்ப்பதில்லை. அவர் பின்பற்றும் கொள்கை என்ன? அவர் எந்த வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறார் என்பதை பொறுத்தே ஆதரவு அல்லது எதிர்ப்பு என் பதை முடிவு செய்கிறது. அந்த வகையில் ஒபாமா இந்தியாவை ரட்சிக்க வரவில்லை. மாறாக, சுரண்டலை, நிர்ப்பந்தத்தை தீவிரப் படுத்தவே வருகிறார். மரண வியாபாரியாக விளங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாகவே இங்கு வருகிறார். அவரது வருகையை எதிர்க்க இடதுசாரிக் கட்சிகள் மட்டுமின்றி அனைத்து தேசபக்தர்களும் முன்வர வேண்டும்.

நவம்பர் 8ம் தேதி நாடு முழுவதும் இடதுசாரிக்கட்சிகள் நடத்திட உள்ள ஏகா திபத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தேசமே அணி திரளட்டும்.

புதன், 10 நவம்பர், 2010

தொழிற்சங்க போராட்டமும்- வரலாறு கூறும் பாடமும் - டி.கே.ரங்கராஜன் எம்.பி.

முதலாளித்துவ சமூகத்தில் உழைப்புக் கும், மூலதனத்திற்கும் இடையிலான முரண் பாடு தவிர்க்கமுடியாதது. மூலதனத்தால் ஒட்டச் சுரண்டப்படுகிற தொழிலாளர்கள் ஒன்று திரண்டு போராட முன்வருகிறார்கள். இதற்கு தலைமை தாங்குவது, வழிநடத்துவது, வர்க்க உணர்வுள்ள தொழிற்சங்கங்களின் தலையாய கடமையாகும்.

இந்திய தொழிலாளர்களின் நிலை குறித்து ஆராய பிரிட்டிஷ் அரசு கமிஷன் ஒன்றை அமைத்தது. ராயல் கமிஷன் ஆப் லேபர் என் றழைக்கப்பட்ட இந்த கமிஷனின் நடவடிக் கைகளை புறக்கணிக்க வேண்டுமென்று ஏஐடியுசி பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தக் கமிஷன் தொழிலாளர்களையும் தொழிற்சங்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கத்துடன் அமைக்கப் பட்டதால்தான் ஏஐடியுசி அதை எதிர்த்தது.

ஆனால் இந்த முடிவை எதிர்த்து பின் னாளில் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி உள்ளிட்ட சில தலைவர் கள் வெளிநடப்பு செய்தனர். அவ்வாறு வெளி யேறிய அவர்கள் தனி அமைப்பை உரு வாக்கியதோடு, அறிக்கை ஒன்றையும் வெளி யிட்டனர். ஏஐடியுசி அரசுக்கு எதிராக வர்க்க போராட்டத்தை தூண்டிவிடுகிறது என்றும், இது ஒரு தொழிற்சங்கத்தின் வேலையல்ல என்றும் அவர்கள் கூறினர். மேலும் 1928-29களில் தொழிற்சங்க இயக்கத்தில் பல் வேறு குழப்பங்களும் உருவாக்கப்பட்டன.

இந்நிலையில் 1929ம் ஆண்டு நடைபெற்ற ஏஐடியுசி மாநாட்டிற்கு தலைமைப் பொறுப் பேற்ற தலைவர் இவர்களுக்கு பதிலளித்து பேசுகையில் கீழ்க்கண்டவாறு கூறினார்.

“முதலாளித்துவ சமூகத்தின் கருப்பை யிலேயே வர்க்கப் போராட்டத்திற்கான கரு அமைந்துள்ளது. வர்க்கப் போராட்டத்தை பிரச்சாரம் செய்கிறோம் என்றும், வர்க்கங் களுக்கிடையேயான தூரத்தை மேலும் விரிவுபடுத்துகிறோம் என்றும் நம்மீது அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது. முத லாளித்துவத்தின் காரணமாகவே இந்த தூர மானது விரிவானதாக இருக்கிறது... சோச லிஸ்ட்டுகள் அல்லது கம்யூனிஸ்ட்டுகள் தான் வர்க்கங்களாக பிரிந்து அவற்றிற் கிடையே கசப்புணர்வை பிரச்சாரம் செய் கிறார்களா? அல்லது தனது கொள்கை, முறை ஆகியவற்றின் மூலம் மனித குலத்தில் பெரும் பகுதியினரை பழங்காலத்தில் இருந்த அடிமைகளை விட பல வகையில் மோசமான நிலையில் உள்ள கூலி அடிமைகளாக மாற்றி யது முதலாளியின் ஏகாதிபத்தியம் அல்லவா? இந்த வர்க்கப் போராட்டம் என்பது நம்மால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அது முதலாளித்துவத்தினால் உருவாக்கப்பட்டது. முதலாளித்துவம் நீடிக்கும் வரையில் அது வும் நீடிக்கவே செய்யும்... வர்க்கப்போராட்டம் இருந்து வந்துள்ளது. இன்றும் நீடிக்கிறது. நெருப்புக் கோழி மணலில் தலையை புதைத் துக் கொள்வது போல் அதை ஒதுக்கிவிடு வதன் மூலம் அதிலிருந்து நாம் விடுபட்டுவிட முடியாது. இதற்கான காரணங்களை நாம் அகற்றுவதன் மூலம் மட்டுமே நம்மால் அமைதியைக் கொண்டுவர முடியும்”

இவ்வாறு மாநாட்டில் பெருமைமிகு தலைமை உரையாற்றியவர் வேறுயாருமல்ல. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பொறுப்பேற்ற பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் தான்.

ஆனாலும் அவர் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு தொழிலாளர் போராட்டங்களை இத்த கைய கண்ணோட்டத்தில் அணுகினார் என்று கூறமுடியாது. அவர் தலைமை தாங்கிய வர்க் கத்தின் நலன்களுக்கு ஏற்பவே செயல்பட்டார்.

இன்றைக்கு கம்யூனிஸ்ட்டுகள் தொழில் அமைதியை கெடுக்கிறார்கள் என்றும், போராட்டத்தை தூண்டிவிடுகிறார்கள் என் றும், முதலீடு வருவதை முடக்குகிறார்கள் என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இவர் களுக்கு நேரு அன்றைக்கு கூறிய பதில் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பொருந்தும்.

பின்னாளில் காங்கிரஸ்காரர்கள் கம்யூ னிஸ்ட்டுகள் போராட்டத்தை தூண்டுவதாக குற்றம்சாட்டிய பொழுது, திராவிட முன்னேற் றக்கழகத்தின் தலைவரான அண்ணா அவர் கள் தனக்கே உரிய பாணியில் “பணத் தோட்டம்” நூலில் இவ்வாறு பதிலளித்தார்.

“காங்கிரஸ் கட்சியினர் தொழிலாளர் களிடம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உள்ள தொடர்பை போட்டியிட்டோ, பிரச்சாரம் மூலமோ அடக்குவதன் மூலமோ துண்டித்து விடக்கூடும்- துண்டிக்கப்படுவது அத்த னையும் அழிவதில்லை. துளிர்ப்பதுண்டு... வெட்ட வெட்ட சுரப்பதும்... அரைக்க அரைக்க மணப்பதும்-துண்டிக்க துண்டிக்க துளிர் அதிகம் விடுவதுமாகப் பல இயற்கை நிகழ்ச் சிகள் உண்டு. துண்டிக்கவே முடிகிறது என்று கொண்டாலும், தொடர்பை போக்கி விடுவதால் பிரச்சனையை போக்கிவிட முடியாது. கம்யூனிஸ்ட்டுகளை தொழிலாளர் களிடமிருந்து நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக காங்கிரஸ் காரர்களைக் கொண்டு தொழிலாளர் இயக்கத்தை நடத்தச் சொன் னாலும் மூலம் கெட்டுவிடப்போவதில்லை. காங்கிரஸ்காரர் அந்த முனையில் வேலை செய்ய ஆரம்பித்த சில காலத்திற்குப் பிறகு தொழிலாளர் பிரச்சனையை நேரடியாக கவனிக்கத் துவங்கியதும் தனது வெள்ளைச் சட்டை காவியேறி சிவப்பாகி விடுவதைக் காண்பார்கள்; அதாவது அவரும் கம்யூனிஸ்ட் ஆகிவிடுவார். கோவை வேலை நிறுத்தத் துவக்கத்தின் போதே ஆலைக்காரர்கள் தமது அறிக்கையிலே என்ன கூறுகின்றனர்? கம்யூ னிஸ்ட்டுகள் மீது என்ன கூறுவார்களோ வழக்கமாக, அதே குற்றச்சாட்டுத் தான். “தகராறு கிளப்புகிறார்கள்; தூண்டிவிடு கிறார்கள்; பலாத்காரச் செயலில் ஈடுபடு கிறார்கள்; உருட்டல் மிரட்டல் செய்கிறார்கள்.” இவைகளை எல்லாம் செய்வதாகத்தான் கம்யூனிஸ்ட்டுகள் மீது குற்றம்சாட்டினர். கோவையிலே ‘ஸ்டிரைக்’ நடத்தும், தொழிற்சங்கத்தாருக்கும் இதேதான். முத லாளிமார் அறிக்கை மூலம் அர்ச்சனை நடக்கிறது. அது மட்டுமா!இல்லை! கம்யூ னிஸ்ட்டுகளை விட இவர்களே மோசமான முறை களில் நடந்துகொள்கிறார்கள்-என்று குறை கூறுகிறார்கள் முதலாளிமார்கள்.

“ஐவ ளை அடிளவ ரகேடிசவரயேவந வாயவ வாந ருniடிn டநயனநசள iளேவநயன டிக உசநயவiபே ய உடிபேநnயைட யவஅடிளயீாநசந உடினேரஉiஎந வடி ய ளநவவடநஅநவே ளாடிரடன நெ சநளடிசவiபே வடி iவேiஅனையவiடிn. ஏiடிடநnஉந யனே டிவாநச வயஉவநைள றாiஉா யசந றடிசளந வாயn வாடிளந யனடியீவநன லெ வாந உடிஅஅரnளைவள...”- (இந்து 13-2-47, 4ம் பக்கம்)

இப்படித்தான் நிலைமை எழும். வேலை நிறுத்தத்தை யார் நடத்தினாலும் குற்றச் சாட்டு இதுவாகத்தான் கூறப்படும்! பிள்ளை யார் சுழி போட்டுப் புதுக்கணக்குத் துவக்கும் போதே, ஆலை அரசர்கள், இந்த வாசகத்தை கொட்டை எழுத்திலே எழுதி வைத்துவிடு வர். நாட்டிலே யார் தொழிலாளர் பிரச்சனைக் காக வேலை செய்தாலும் இந்த ஏட்டை எதிரிலே நீட்டுவர்”

இன்றைக்கு தமிழகத்தில் துவங்கப்பட் டுள்ள பன்னாட்டு நிறுவனங்களில் தொழி லாளர்கள் ஒட்டச் சுரண்டப்படுகிறார்கள். இதை எதிர்த்து போராடும் அவர்களுக்கு சிஐடியு தலைமை தாங்குகிறது. இந்தத் தொழிற்சாலைகளில் ஏதோ தொழில் அமைதி பூத்துக் குலுங்குவது போலவும், மார்க்சிஸ்ட்டுகள் தொழிலாளர்களை தூண்டி விட்டு அதை கெடுப்பவர்கள் போலவும் சித்தரிப்போரின் சிந்தனைக்கு பண்டித நேருவும், அறிஞர் அண்ணாவும் முன்வைத்த கருத்துக்களையே சமர்ப்பிக்கிறோம்.

ஹூண்டாய், பாக்ஸ்கான் போன்ற பன் னாட்டு நிறுவன ஆலைகளில் குறைந்தபட்ச தொழிற்சங்க உரிமைகள் கூட மறுக்கப்படு கின்றன. ஆலை வாயிலில் கொடியேற்றுவது கூட குற்றம் என கூறப்பட்டது. மேலும் சுரண்டலுக்குள்ளாகும் தொழிலாளர்கள் தன் னெழுச்சியாக போராட முன்வருகிறார்கள். அவர்களுக்கு சிஐடியு தலைமை தாங்குகிறது.

குறிப்பாக ஹூண்டாய், பாக்ஸ்கான் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தில் பல் வேறு கள அனுபவங்கள் கிடைத்துள்ளன. வேலைநீக்கம், இடைநீக்கம், சட்டவிரோத சம்பள வெட்டு, பொய் வழக்கு, சிறை, கை விலங்கு என அடக்குமுறைகளை சந்திக்க நேர்ந்தது. போராட்டங்களின் மூலமாகவும், நீதிமன்றங்களின் வாயிலாகவும் அநீதி களுக்கு எதிரான போராட்டத்தை தொய்வின்றி தொடர வேண்டியுள்ளது.

நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்தத் தொழி லாளர்கள் 13ஆயிரம் பேர் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்பன உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து போராடினார்கள். அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தின. பந்த் உள்ளிட்ட போராட்டம் மூலம் பொதுமக்களும், அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

ஹூண்டாய், பாக்ஸ்கான், நெய்வேலி தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன் வைத்தும், மத்திய அரசின் பொதுத்துறை நிறு வனமான என்.எல்.சி. தொழிலாளர் போராட் டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கவும் பாக்ஸ்கான் போன்ற பன்னாட்டு ஆலை களில் குறைந்தபட்ச தொழிற்சங்க உரிமை கள் கூட மறுக்கப்படுவதன் அபாயத்தை எடுத்துரைக்கவும் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை நானும் சிஐடியு பொதுச்செய லாளர் தோழர் அ.சவுந்தரராசனும் சந்தித்தோம்.

அடக்குமுறைகளை எதிர்த்தும் நடை பெற்ற போராட்டங்களில் ஜனநாயக எண் ணம் கொண்ட அனைத்து தொழிற்சங்கங் களும் பங்கேற்றன. இதன் மூலம் பரந்துபட்ட தொழிற்சங்க ஒற்றுமை உருவாகியது. மாநில முதல்வர் தலையீட்டால் நெய்வேலி உடன் பாடு ஏற்பட்டது நல்ல விஷயமாகும்.

மேலும், ஹூண்டாய், பாக்ஸ்கான் தொழி லாளர்களுடைய நியாயமான கோரிக்கை களை பேசித்தீர்க்க முதல்வர் உத்தரவிட் டுள்ளார். அரசு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமென்று நம்புகிறோம்.

மேற்குவங்கம், ஆந்திரம் போன்ற மாநி லங்களில் உள்ளதைப்போல் தமிழ்நாட்டிலும் தொழிற்சாலையில் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க ஒரு சட்டம் தேவைப்படுகிறது. அதனுடைய அவசியத்தை முதல்வரிடம் வலியுறுத்தினோம். முதல்வரும் அதை பரிசீலிப்பதாக ஏற்றுக்கொண்டுள்ளார். இச்சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று நம்புகிறோம்.

தொ.மு.ச. ஏற்கனவே ஒரு உடன் பாட்டிற்கு வந்தபோதும் என்.எல்.சி. தொழி லாளர்கள் அதை ஏற்கவில்லை. இந்த யதார்த் தத்தை முதல்வரும் உணர்ந்ததால்தான் பிரச் சனையில் தலையிடக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார். இந்த பின்னணியில் தமிழக முதல்வரின் தலையீட்டின் காரண மாக என்.எல்.சி. தொழிலாளர் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது பாராட்டத் தக்கது. அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர் களையும் நிரந்தரப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசின் தலையீடு தொடர்ந்து தேவைப்படுகிறது.

தொழிலாளர்கள் இன்றி தொழில் வளர்ச்சி இல்லை. தொழிலாளர்களின் உரிமைகள் பாது காக்கப்படும்போது தான் தொழில் அமைதி யும் பாதுகாக்கப்படும். கம்யூனிஸ்ட்டுகள் தொழில் வளர்ச்சியிலும், தேசத்தின் வளர்ச்சி யிலும் அக்கறை கொண்டவர்கள். அதே நேரத் தில் தொழிலாளர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்ட வர்கள். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானதல்ல.