சனி, 9 அக்டோபர், 2010

அயோத்தி தீர்ப்பும்-அம்பலமான முகவிலாசங்களும் - டி.கே.ரங்கராஜன் எம்.பி.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் குறித்த தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றத் தின் லக்னோ பெஞ்ச் செப்டம்பர் 30ஆம் தேதி யன்று வழங்கியது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை இந்து மகாசபை, நிர்மோகி அகோரா மற்றும் சன்னி வக்பு வாரியம் ஆகியவற்றிற்கு மூன்றாக பிரித்து வழங்க வேண்டும் என்பது அந்தத் தீர்ப்பின் சாராம்சம்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகிய மூவரிடையே தீர்ப்பு குறித்து ஒத் தக் கருத்து இல்லை. தீர்ப்புரையில் மட்டு மின்றி பல்வேறு அம்சங்களிலும் மூன்று நீதிபதிகளும் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக நீதிபதி அகர்வால், மூன்று கோபுரம் போன்ற அமைப்புள்ள இந்தக் கட்டடத்தின் நடுக்கோபுரத்திற்கு கீழே உள்ள இடம்தான் ராமர் பிறந்த இடம் என்று இந்துக் கள் காலம் காலமாக நம்பிக்கை கொண்டு வந்துள்ளனர் என்று கூறியுள்ளதோடு, இந்த நம்பிக்கைதான் ராமர் பிறந்த இடம் இதுதான் என்பதற்கு ஆதாரம் என்று கூறியுள்ளார். இந்தத் தீர்ப்புடன் பதவி விலகும் அவரை சாமியார்கள் சபை “வெகுவாக” பாராட்டி யுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் சட்ட நெறிமுறைகளை ஆதாரமாகக் கொள்ளாமல் நம்பிக்கையை ஆதாரமாக்குவதை ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர். ‘பண்டைக்கால இந்தியா’ குறித்த பிரபல வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாப்பர் ‘ஹிந்து’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் “ஒரு சமூகம் என்று கூறிக்கொண்டு தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் இதுதான் கடவுள் பிறந்த இடம் என்று அறிவிப்பு செய்யக்கூடிய முன் னுதாரணத்தை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியுள் ளது. இனி ஏராளமான ‘அவதரித்த இடங்கள்’ என்ற பிரச்சனைகள் உருவாகலாம். வேண்டு மென்றே வரலாற்று ரீதியான சின்னங்களை அழித்தது கண்டிக்கப்படவில்லை என்றால், மற்ற சின்னங்களை அழிப்பதை எப்படி தடுக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பி யுள்ளார். வரலாற்றுக்கு உள்ள மரியாதையை இந்தத் தீர்ப்பு செல்லாக்காசாக்கி உள்ளது. வரலாற்றின் இடத்தில் மத நம்பிக்கையை அமர்த்திவிட்டது என்றும் அவர் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.

ரொமிலா தாப்பரின் அச்சம் நியாயமானது. நாளைக்கே ஒருவர், இப்போது நாடாளுமன் றக் கட்டடம் இருக்கும் இடத்தில்தான் அனுமன் பிறந்தார் என்று கூறலாம். இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், நான் அப் படித்தான் நம்புகிறேன், அதுதான் ஆதாரம் என்று வம்படி வழக்கு நடத்துவதோடு, அயோத்தி குறித்த அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச்சின் தீர்ப்பைக்கூட துணைக்கு அழைக்கலாம்.

அயோத்தி தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து தேசிய, மாநில அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளன. தீர்ப்பு வெளியானவுடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்த அறிக்கையில், மக்கள் எந்தவிதமான தூண்டுதலுக்கும், ஆத்திரமூட்டலுக்கும் இரையாகாமல் அமைதியையும், சமூக நல்லி ணக்கத்தையும் பேணுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததோடு, இந்தத் தீர்ப் பினை முழுமையாக படிக்க வேண்டியுள் ளது. தீர்ப்புரையின் தன்மை குறித்து கேள்வி கள் எழக்கூடும் என்று மிகுந்த எச்சரிக்கை யோடு கருத்து தெரிவித்தது. இதேபோன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் “சிக்கலான விஷயங்கள் இந்தத் தீர்ப்பில் உள்ளன. எனவே தீர்ப்பு முழுமையாக கூர்ந்து ஆராயப் படவேண்டும்” என்று கவனமாக கூறியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு கூட்டத்தில், தீர்ப்பின் அனைத்து அம்சங்களும் விரிவாக விவாதிக் கப்பட்டு அதன்பின் வெளியிடப்பட்ட அறிக் கையில், “சம்பந்தப்பட்ட நிலத்தை மூன்று பகுதிகளாக பிரிக்க வேண்டும் என்ற இந்த தீர்ப்பு, நம்பிக்கை மற்றும் விசுவாசம் என்பதை அடிப்படையாகக் கொண்டே அளிக்கப்பட் டுள்ளது. மத நம்பிக்கை மற்றும் மதத்தின் மீதான விசுவாசம் ஆகியவற்றை முதன்மைப் படுத்தி ஏற்றுக்கொள்ளும் விதமாக தீர்ப்புரை யின் கண்ணோட்டம் அமைந்துள்ளது. உண் மைகளுக்கும் ஆதாரங்கள் தொடர்பான ஆவ ணங்களுக்கும் மேலாக மேற்கண்ட நம்பிக் கையே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் ஒரு ஆபத்தான முன்னுதார ணமாக அமைந்துவிடும்” என்று கூறியது.

“மேல்முறையீட்டின் போது உச்சநீதிமன் றம் நமது அரசியல் அமைப்புச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஜனநா யக அமைப்பு முறையில், நீதித்துறைகளின் நடவடிக்கை மூலமாக இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும்” என்றும் அரசி யல் தலைமைக்குழு கூறியுள்ளது. இதன் பொருள், வெளிவந்துள்ள தீர்ப்பு மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பு முறையில் அமைய வில்லை என்பதே ஆகும்.

அதே நேரத்தில் பல்வேறு கட்சிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களின்படி அந்தக் கட்சிகளின் குணாம்சங்களையும், கண் ணோட்டங்களையும் புரிந்து கொள்ள முடி கிறது. தீர்ப்பு குறித்து பாஜக தலைவர்கள் அனைவரும் திருப்தி தெரிவித்தனர். ராமஜென்ம பூமி பிரச்சனையில் சாதகமான அம்சம் இது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். ராமருக்கு கோயில் கட்ட இந்தத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளது என்றார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. சர்ச்சைக்குரிய இடத்தில் பெரும்பகுதி ராமர் கோவில் கட்டு வதற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது என்றார் முரளி மனோகர் ஜோஷி. இந்தத் தலைவர்கள் அனைவரையும் ஆட்டுவிக்கும் ஆர்எஸ்எஸ் பீடத்தின் தலைவரான மோகன் பாகவத், யாருக்கும் வெற்றியோ தோல்வியோ இல்லை என்று பெருந்தன்மையாக கூறுவது போல் கூறிவிட்டு, அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட வழி ஏற்படுத்தித்தந்த தீர்ப்பு இது என் றும் இந்தக் கோரிக்கை பிற்போக்குத்தனமா னது அல்ல என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

சட்டம் மற்றும் ஆதாரத்தை அடிப்படை யாகக் கொள்ளாமல் வெளிவந்துள்ள தீர்ப்பை ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரம் குதூகலத் தோடு வரவேற்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றே. அதிலும் அத்வானி மேலும் ஒருபடி சென்று, அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட தாம் நடத்திய ரதயாத்திரை சரியானது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்றார். அநேகமாக அடுத்து அவர், பாபர்மசூதி இடிப்பு சரியானது என்பதுதான் தீர்ப்பின் சாராம்சம் என்று கூட கூறக்கூடும்.

நேரு காலத்திலிருந்து நரசிம்மராவ் காலம் வரை அயோத்தி பிரச்சனையில் குழப்பமான, சந்தர்ப்பவாத நிலை எடுத்து வரும் காங்கிரஸ் கட்சி, இந்தத் தீர்ப்பு குறித்து வெளியிட்ட மாறுபட்ட கருத்துக்களும் அதை பிரதிபலிப் பதாகவே இருந்தது.

தேசத்தையே கவலை கொள்ள செய்த இந்த தீர்ப்பு விஷயத்தில் திமுகவும், அதிமுக வும் ஒரே மாதிரி கருத்து தெரிவித்தன. திருப்தி அளிப்பதாக உள்ளது என்பதுதான் அது.

அதிலும் பகுத்தறிவு பாரம்பரியத்தை பின்பற்றுவதாகக் கூறும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞர் உடனடி யாக வெளியிட்ட கருத்து அதிர்ச்சியளிப்ப தாக இருந்தது. அயோத்தி தீர்ப்பு இரு தரப் பினருக்கும் திருப்தியடையக்கூடிய வகை யில் உள்ளதாக அவர் கூறினார்.

ராமர் கட்டிய பாலம் என்பது தங்களது நம் பிக்கை என்று கூறித்தான் ஆர்எஸ்எஸ் பரி வாரம் சேதுக்கால்வாய் திட்டத்தை நீதிமன்றத் தின் மூலம் முடக்கி வைத்துள்ளது. அது குறித்த விசாரணை நடைபெற்றுவரும் நிலை யில், நம்பிக்கை அடிப்படையில் அளிக்கப் பட்டஅயோத்தி தீர்ப்பை இருதரப்பும் ஏற்கக் கூடியதாக உள்ளது என்று முதல்வர் கூறியது வினோதமானது. இந்த வாதம் ஏற்கப்பட்டால் ராமர் பாலம் கட்டியதாக ஒரு தரப்பினர் நம்பு கிறார்கள். எனவே அதை இடிக்கக்கூடாது என்று ஒத்துக்கொள்வது போலாகிவிடும்.

நடைமுறை அரசியலுக்காக இவ்வாறு கூறியதில் ஏற்பட்ட சறுக்கலை சரி செய்யும் வகையில் அவர் நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டார். ராமர் பிறந்த இடத்தை கண்டு பிடிக்க முடிகிறது. ராஜராஜன் நினைவிடத்தை கண்டறிய முடியவில்லையே என்று ஆதங் கம் வெளியிட்டார். தீர்ப்பு ஏற்படுத்தப்போகும் விபரீதம் குறித்த விமர்சனத்தைவிட, ராஜ ராஜன் குறித்த பெருமிதம் சார்ந்த ஆதங்கமே இதில் அதிகமாக வெளிப்பட்டது.

இவ்வாறு தடுமாறுவதும் சமாளிப்பதும் திமுகவுக்கு புதிதல்ல. இந்தியாவின் இறை யாண்மையை காவுகேட்கக்கூடிய அணு சக்தி உடன்பாடு குறித்த பிரச்சனை முன் னுக்கு வந்தபோது, இடதுசாரிகள் சிந்திப்ப தற்கு முன்பே இதிலுள்ள ஆர்வத்தை நான் சிந்தித்தேன் என்றார். இடதுசாரிகளின் அச் சத்தில் நியாயம் உண்டு என்றும் ஒத்துக் கொண்டார். ஆனால் பிறகு திடீரென தனது நிலையை மாற்றிக்கொண்டு மன்மோகன் சிங் அரசுக்கு ஆதரவாக அதன்மூலம் அமெரிக்கா வுடனான அணுசக்தி உடன்பாட்டுக்கு ஆதர வான நிலைபாட்டினை திமுக எடுத்தது.

பதவிக்காக பகுத்தறிவு கொள்கைக்கு முற்றிலும் முரணான மதவெறி பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு பெற்றது. அந்தத் தடுமாற்றம் இப்போது அயோத்தி தீர்ப்பு குறித்த கருத்திலும் வெளிப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக