சனி, 25 செப்டம்பர், 2010

பெண்ணுக்கு முதலிடம் தந்த பெருமைமிகு காப்பியங்கள்

சிலம்பு என்பது பெண்கள் பாதத்தில் அணிகிற ஆபரணம். மேகலை என் பது பெண்கள் இடையில் அணி வது. இந்த இரண்டு ஆபரணங் களைத் தலைப்பாகக் கொண்டே தமிழன் காவியங்கள் படைத்திருக் கிறான். இதுவே ஒரு புதுமையல் லவா? அந்தக் காலத்தில் காவியங் கள் எனச் சொல்லப்பட்ட இதிகா சங்கள் ராமாயணமும், மகாபாரத மும். ஆனால் அதில் ஒன்று ராம னின் பெயராலும், மற்றொன்று நாட் டின் பெயராலும், படைக்கப்பட் டதே தவிர பெண்கள் அணியக் கூடிய அணிகலன்களின் பெயரால் காவியங்கள் படைத்தவன் அநேக மாக இந்தியாவிலேயே தமிழனா கத்தான் இருக்கமுடியும். பேரறி ஞர்கள் யோசித்துச் சொல்லலாம் உலகிலேயே அப்படிப் படைத்த வன் தமிழன்தானோ என்று. இதி லேயே பெண்ணுக்கு முக்கியத்து வம் கொடுத்த செய்தி இருக்கிறது. வெறும் தலைப்புகள் மட்டுமல்ல. இந்த இரண்டுக்குள்ளும் நீங்கள் முக்கியமானதொரு ஒற்றுமை யைக் காணமுடியும். இரண்டி லுமே கதை நாயகர்களே கண்ணகி யும், மணிமேகலையும் ஆகிய பெண்கள் தான். ராமாயணத்தில் ராமன் நாயகன். மகாபாரதத்தில் பஞ்சபாண்ட வர்கள் நாயகர்கள், அவர்களிலும் அர்ச்சுனன் நாயகன். ஆனால், நம்முடைய சிலம்பிலே கண்ணகிதான் நாயகன், கண்ணகி தான் நாயகி. நம் முடைய மணி மேகலையிலே மணி மேகலைதான் நாயகன், மணி மேகலைதான் நாயகி. இன்னும் சொல்லப் போனால் ஆண்களை யெல்லாம் எதிர்க் கதாநாயகர் களாக - ‘ஆன்ட்டி ஹுரோ’க்களாக ஆக்கி விட்டனர். மதுரைக் கூல வாணிகர் சாத்தனார் ஒரு வியா பாரியாக இருந்தபோதும் ஒரு கணிகையின் மகளை நாயகியாக்கி மணிமேக லைக் காவியம் படைத்திருக்கிறான்.

இந்தக் காவியம் எப்படி ஆரம்பிக் கிறது தெரியுமா? புகாரில் இருக்கும் ஆன்றோர்களெல்லாம் கவலைப் படுகிறார்களாம். என்ன கவலை? ஒரு நாடக மகள் எப்படியெல்லாம் வாழ வேண்டுமென்று நம்முடைய இலக்கணங்களும் சாத்திரங்களும் சொல்லியிருக்கின்றன. இவற்றுக் கெல்லாம் மாறாக அல்லது இவற்றை யெல்லாம் மீறி துறவு வாழ்க் கையை எப் படி மணிமேகலைக்கு மாதவி தரலாம்? இப்படிக் கோபா வேசமாகப் புலம்பினார்கள் புகார் நகரத்து மக்கள் என்கிறார் மணி மேகலையின் ஆசிரியர். அந்தப் பேச்சையெல்லாம் ‘பண்புஇல் வாய் மொழி’ என்கிறார். ஒரு கணிகை மகள் ஏன் துறவியாகக் கூடாது என்று அவர் கேட்டார். அதுவும் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர்.

எதையெடுத்துப் பார்த்தாலும் வித்தியாசமாக இருக்கிறது. நம் முடைய முதல் இரு காப்பியங் களே பெண்ணுக்கு முதலிடம் தரு கிறது என்பது மட்டுமல்ல. வர்ணா சிரமத்தை உடைத்து நொறுக்கு கிறது. கணிகை மகளுக்குக்கூட இந்த நாட்டிலே ஒரு உயர்ந்த அந் தஸ்தைத் தரவேண்டுமென உரிமைக் குரல் எழுப்புகிறது.

சிலப்பதிகாரத்தை ஊன்றிப் படித்தால் இளங்கோவடிகள் கற்புத்தன்மைக்கெல்லாம் பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதை அறியலாம். அவன் கண் ணகியை ஒரு மகத்தான போராளி யாகச் சித்தரித்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். அவள் புரு ஷன் பேச்சைக் கேட்டு நடந்தவ ளாக இருக்கலாம். ஆனால் அரச னையே தட்டிக்கேட்ட கண்ணகி போராளிதான். கணவனைக் கொன்றுவிட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்டதும் கண்ணகி கிளம்பி வருகிறாள். எப்படி வரு கிறாளாம்? ஏன் கிளம்பி வருகி றாளாம்? நீங்கள் என் கணவனைக் கொன்றுவிட்டதால் நான் விதவைக் கோலம் பூண்டு, நதிகள் தோறும் சென்று நீராடிக்கொண்டு பொழு தைக் கழிப்பேன் என்று நினைத் துக்கொண்டீர்களோ என்று அவள் கேட்டாள். அப்படியொரு சராசரிப் பெண்ணாக நான் இருக்க மாட்டேனென்று கொதித்து எழுந்த கண்ணகி, பாண்டிய மன் னனிடம் வந்தாள். அவளை அரசன் பார்த்த மாத்திரத்தில் என்ன ஆனா னாம்? ‘கண்டளவே தோற்றான், அக்காரிகை தன் சொல் செவி உண்டளவே தோற்றான் உயிர்’ என்று இளங்கோவடிகள் சொல் கிறார். கண்ணகியை வெறும் போராளியாக மட்டும் காட்ட வில்லை, மாறாக தர்க்கரீதியில் வாதாடக்கூடிய வழக்கறிஞராக வும் காட்டினான் இளங்கோவடி கள். மணிமேகலையும் அப்படித் தான் இளவரசனையே எதிர்த்தாள். ஆக, தவறு செய்தவன் அரசன் ஆனாலும், இளவரசன் ஆனாலும் பெண்களும் தட்டிக்கேட்க வேண் டும் என்கிற உணர்வை ஊட்டக் கூடியவை நம்முடைய காவியங்கள்.

மணிமேகலையின் வறுமை எதிர்ப்பு என்பது மிகவும் குறிப் பிட்டுச் சொல்லத்தக்கது. வேறு எந்தக் காவியத்திலும் இந்தளவிற்கு வெளிப்படையாக வறுமை எதிர்ப்பு கிடையாது. நூலாசிரியர் சாத்தனார் பசி என்ற சொல்லை அப்படிச் சாதாரணமாகவே சொல்ல மாட்டார், பசிப்பிணி என்றுதான் குறிப்பிடுவார். நாம் யாரையெல் லாமோ பாவி என்போம், அவர் பசியைத்தான் பாவி என்பார். பசியென்னும் பாவியை ஒழிக்க வேண்டும் என்று அற்புதமாகப் பாடிச்சென்றிருக்கிறார். ஆனால் ஒரு இலக்கியவாதி தனக்கே உரிய பாணியிலே அதற்கான தீர்வைச் சொல்லுகிறார். உங்களுக்குத் தெரி யும் அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி என்பது. அமுதசுரபி என்பது ஒரு கற்பிதம். என்ன கற்பி தம்? ஒரு நல்ல அரசனின் மனசு எப்படியிருக்கவேண்டும் என்பதற் கான கற்பிதம். அரசன் நல்லவனா னால் அவன் மனசு அள்ள அள்ளக் குறையாததாக இருக்கவேண்டும். அப்படியொரு கற்பிதத்தை காவியா சிரியன் இங்கே வைத்திருக்கிறானோ என்றுகூட நான் நினைப்ப துண்டு.

உண்மையிலேயே முடியாதவர் களுக்கு, உண்மையிலேயே வறுமை யில் வாடுபவர்களுக்கு உணவு கொடுப்போரே உயிர் கொடுப் போர் ஆவர். இந்தச் செய்தி இன் றைக்குக்கூடப் பொருந்தும். இந்தி யாவில் வளர்ச்சி இருக்கிறது, ஆனால் வறுமையில் வாடுபவர் களும் இருக்கிறார்கள். வளர்ச்சி யடைந்தவனுக்கே நாம் மீண்டும் மீண்டும் கொடுத்துக்கொண்டே இருப்போமானால் அது கொடுப்ப தாகாது. உண்மையில் யார் வறு மையில் வாடுகிறார்களோ அவர் களுக்குக் கொடுக்கவேண்டும் என் கிற செய்தியை இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ளலாம். இத்தகைய அரசியல் பொருளாதாரக் கோட் பாடு, அரசியல் நியாயம் போன்ற வற்றையெல்லாம் நாம் மணிமேகலை யிலிருந்து பெறமுடியும். இந்த முறையிலே நாம் பார்த்து, அவற்றை நம் மாணவர்களுக்குக் கற்றுத் தரு வோமானால் நம்முடைய இலக்கி யங்கள் குறித்து அவர்களுக்கு ஒரு மரியாதை ஏற்படும். அத்தகைய இலக்கியங்களுக்குத் தமிழர்களா கிய நாமெல்லாம் சொந்தக்காரர்கள்.

(திண்டுக்கல் ‘இலக்கியக்களம்’ அமைப்பின் கருத்தரங்கில் த.மு.எ. க.ச. மாநிலத் தலைவர் அருணன் ‘சிலம்பும் மேகலையும்’ என்ற தலைப் பில் ஆற்றிய உரையிலிருந்து.)
- தொகுப்பு: சோழ.நாகராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக