சனி, 25 செப்டம்பர், 2010

கொலைச்சிந்து: பெயர்க் காரணம் - ப.சரவணன்

சிந்துவின் பலவகையினுள் ஒன்றாகிய கதைச் சிந்தே நாளடைவில் கொலைச் சிந்து எனப்புகழ் பெற்றது. கந்தனைப் பாட எழுந்த காவடிச் சிந்து காலப் போக்கில் கதைகள் கூறும் சிந்துக ளாக மாறியது. அவை பொழுது போக் குக் கதைகளாக அமையாது, உண்மை நிகழ்ச்சிகளை, அதுவும் சமுதாயத்தில் நிகழ்ந்த கொலை நிகழ்ச்சிகளைக் கதைகளாக அமைத்து முச்சீர் கொண்ட சிந்தடிகளால் பாடப் பெறுவதால் கொலைச் சிந்து எனப் பெயர் பெற்றது.

கொலைச் சிந்தில் அடுக்கடுக் காகக் கொலை நிகழ்ச்சிகள் வருவது டன் தற்கொலை நிகழ்ச்சிகளும் காணப்படுகின்றன. கொலைச் சிந்து, கொலைப்பாட்டு, வேடிக்கைச் சிந்து, விபரீதச் சிந்து, தற்கொலைப் பாட்டு என்ற வேறு பல பெயர்களையும் இது தாங்கியுள்ளது.

கொலைச் சிந்துவின் தோற்றத் திற்குக் காலச் சூழல், இலக்கியச் சூழல், சமுதாயச் சூழல் என்ற மூவ கைக் காரணிகளைச் சுட்டலாம்.

ஆங்கிலேயர் ஆதிக்கப்பிடியில் வாழ்ந்த அன்றைய மக்கள் கல்வியறி வில் மிகவும் பின்தங்கியிருந்தனர். உலகியலறிவும், அரசியல் அறிவும் போதுமானதாக இல்லாத அன்றைய நாட்டு மக்களிடையே கொலை, தற்கொலை முதலியன மனத்தளவில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தின. வானொலி, செய்தித்தாள் கூட அவர் களைச் சென்று அடையாத நிலையில் தகவல் தொடர்பு என்பது கூத்துக் கலைஞர்கள், சிந்துக் கவிஞர்கள் வாயிலாகவே பெரும்பான்மையும் நிலவியது. மேலும் விடுதலை உணர் வுக் கவிஞர்கள் ஊர்ப்புற மக்களை கவர்ந்திட உலகியல் செய்திகளை, குறிப்பாகக் கொலைச் செய்திகளை பாடி மக்களை கூட்டமாகக் கூட்டினர். பின்னர் அவர்கள் கூற வந்த விடுதலை உணர்வுகளை மக்களிடம் தெரிவித் தனர்.

உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளமைப்பில் அமைந்துள்ள இக்கொலைச் சிந்துகளில் நூலின் விலை இடையிடையே பாடலில் பயின்று வருவது கவனிக்கத்தக்கது. “படு கொலையின் சிந்து ஆறுபைசா முந்து” எனச் சிந்தையன் கொலைச் சிந்தும் “கலியுகக் கொலைப்பாட்டு ரெண்டு காலணாதான் நீட்டு” எனப் பட்டப்பக லில் எட்டுபேரை வெட்டி மடித்த கமல வேணி சமர்த்தும் கொலைச் சிந்து நூல் கள் அதன் விலையை இடையிலேயே கொண்டுள்ளதற்குக் எடுத்துக் காட் டாகக் கூறலாம்.

மேலும் நூலின் கடைசியில் ஆசிரி யரைப் பற்றிய தொடர்களும் மக்க ளுக்கு அறிவுறுத்தப்படுவனவாக அதன் வெளியீடும் அமைந்திருக்கும். வீரம் முதலிடம் பெற்றிருக்கும். கொலை நிகழ்ச்சிகள் பல மாந்தரை உள்ளடக் கித் தலைமை மாந்தரையே நோக்கிச் செல்லும். அத்துடன் நிகழ்ச்சிகளுக் குச் சுவை கூட்டப் பல்வேறு இலக்கிய உத்திகள் அமைக்கப்பட்டிருக்கும்.

செய்திகளை விளக்கும் நிலையி லும் வருணணை செய்யும் போதும் கொலைச் சிந்து ஆசிரியர்கள் பல் வேறு உவமைகளை கையாண்டுள்ள னர். எடுத்துக்காட்டாக,

கத்தியினால் ஓங்கி ஒரு வெட்டுப்போட

காவேரி போல அங்க ரத்தம் ஓட

(சித்தையன் கொலைச் சிந்து)

யாரும் நடமாடாத வேளை வேளை

சிங்கம் போல் காடுமேடாய் சென்று

(மம்மட்டியான் கொலைச் சிந்து)

போன்ற கொலைச் சிந்துகளைக் கூறலாம்.

நாட்டுப்புற மக்கள் உடனே புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடை யில், அதுவும் வட்டார வழக்கினால் பாடப்பட்டுள்ளது. எனவே, மக்களி டையே வழக்கத்தில் இருந்த ஆங்கி லம், வட மொழி போன்ற பிற மொழி சொற்கள் காணப்படுகின்றன. அவற்று டன் வெளிப்பா கவிதை என்பதால் தொல்காப்பியர் கூறும் ஒன்பது வகைச் சுவைகளில் குறிப்பிட்ட சிலவும் இடம் பெற்றுள்ளன.

சிந்துப் பாடல்கள் நாட்டுப்புற பாடல் களே என்பதால் பாடு பொருளுக்கேற்ப அவை வெவ்வேறு வகையான பாடற் பிரிவுகளைச் சென்றடைகின்றன. இதில் கொலைச் சிந்து பாடல்கள் பாடப் படும் இடம் மற்றும் முறையால் “கொண் டாடப் பாடற்பிரிவில்” அடங்கும் என்பர்.

முழுமையும் நாட்டுப்புற மக் களையே மனதிற் கொண்டு கொலைச் சிந்து படைக்கப் பெற்றதால் அவை நாட்டுப்புற மக்கள் பயன்படுத்திய கும்மி, குறவஞ்சி முதலிய நாட்டுப்புற இசை வகைகளை முழுமையாகக் கொண்டுள்ளன. நிகழ்கலைகளில் ஒருவரே இசைத்துக் கொண்டு பல் வேறு மெய்க் குறிப்புகளுடன் நடித்துக் கதை சொல்லும் புதிய கலையையும் வளர்த்தது.

பண்பாட்டில் மக்கள் கொண்டி ருந்த பிடிப்பினையும், அதனைக் காத் திட அவர்கள் கொண்டிருந்த ஆர்வத் தினையும் கொலைச் சிந்துகள் நன்கு புலப்படுத்துகின்றன. ஏனைய கதைப் பாடல்களைப் போல் நெடியதாக அமையாமல் குறுகிய வடிவில் செய்தி களைத் தரும் இக்கொலைச் சிந்து களைப் படிப்பவர்களும், பாடிக் களிப் பவர்களும் நாட்டுப்புற மக்களேயாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கற்றாரை காமுறச் செய்து நாக ரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் கொள்கலமாய் அமைந் ததுவே நாட்டுப்புற இலக்கியம் என்பார் ச.வே.சுப்பிரமணியம். இக்கொள்கை யின் படியே கொலைச் சிந்துகள் அமைந்துள்ள எனலாம்.

செய்திப் பரிமாற்றமே கொலைச் சிந்தின் அடிப்படையாக இருந்தது. பின்பு அவ்விடத்தைச் செய்தித் தாள் கள் நிரப்பிடவே கொலைச் சிந்துகள் வழக்கொழிந்தன.

பகத்சிங் கொலைச் சிந்து போன்ற சிந்து நூல்கள் அரசால் தடை செய் யப்பட்டு, நூல்களை அழிக்கும் படி ஆணையிடப்பட்டது. (இது இன்று சென்னை எழும்பூர் வரலாற்று ஆவணக் காப்பகத் தில் உள்ளது. ஆ.சு.டீ. குடைந. 1106, ஆ.ள. னயவநன 19.8.1932) என்பதைக் கருத்தில் கொள்ளும் போது இக்கொலைச்சிந்து நூல்களுக்கு மக்களிடையே இருந்த செல்வாக்கு நன்கு புலனாகிறது. சிந்து இலக்கியத்தின் கூறுகளில் ஒன்றான இக்கொலைச் சிந்தின் பாடு பொருளை மிக விரிவாக ஆராய்ந்தால் தமிழகப் பண்பாட்டின் பல கூறுகளை வெளிக் கொணரலாம் என்பது உறுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக